திருப்பூரில் சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி கைது
திருப்பூரில் சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர்,
திருப்பூர் காந்திநகர் பத்மாவதிபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி(வயது 52). இவருடைய மனைவி கலாமணி(45). இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் பணம் வசூலிக்கும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அந்த பகுதியில் உள்ளவர்கள் பணம் செலுத்தி வந்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் வரை பணம் செலுத்தியவர்களுக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். பலமுறை கேட்டும் பணம் கொடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
திருப்பூர் வலையங்காட்டை சேர்ந்த சமையல்காரரான மாணிக்கம்(47) உள்ளிட்ட 10 பேர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தர்ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சங்கீதா இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ஈஸ்வரமூர்த்தி, கலாமணி இருவரும் சேர்ந்து பலரிடம் சீட்டு பணம் வசூலித்து பல லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் மோசடி வழக்கு தொடர்பாக ஈஸ்வரமூர்த்தி, அவருடைய மனைவி கலாமணி ஆகிய 2 பேரையும் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.