கடையம் அருகே பரபரப்பு: கணவர் வீட்டு முன்பு குழந்தையுடன் பெண் என்ஜினீயர் ‘திடீர்’ தர்ணா
கடையம் அருகே கணவர் வீட்டு முன்பு குழந்தையுடன் பெண் என்ஜினீயர் திடீரென தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையம்,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கட்டேறிபட்டி கீழத்தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் முருகன் (வயது 30), என்ஜினீயரான இவர் இந்தோனேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குருசாமி மகளான என்ஜினீயர் தேன்மொழிக்கும் (27) கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் சந்தோசமாக இருந்து வந்தனர். பின்னர் முருகன் வேலைக்காக இந்தோனேசியாவுக்கு புறப்பட்டு சென்று விட்டார். தற்போது அவர் அங்கு வேலை பார்த்து வருகிறார்.
இதையடுத்து தேன்மொழியும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று விட்டார். அங்கேயே தங்கி அவர் வேலை பார்த்து வந்தார். கர்ப்பமாக இருந்த தேன்மொழி, வேலையை விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து விட்டார். பின்னர் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அவ்வப்போது அவர் கணவருடன் போனில் பேசி வந்தார்.
கடந்த நவம்பர் மாதம் தேன்மொழிக்கு பெண் குழந்தை பிறந்தது. அன்றைய தினம் இதுகுறித்து இந்தோனேசியாவில் உள்ள கணவருக்கு போனில் தேன்மொழி தகவல் தெரிவித்தார். மேலும், குழந்தையை பார்க்க விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு வருமாறு அவர் கேட்டு கொண்டார். முதலில் அவர் உடனடியாக விடுப்பு எடுத்துக்கொண்டு வரமுடியாது என்று தெரிவித்தார். ஆனால், அடிக்கடி தேன்மொழி போனில் தொடர்பு கொண்டு குழந்தையை பார்க்க வருமாறு கணவருக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் திடீரென்று ஒருநாள், குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும், அந்த குழந்தையை பார்க்க வரமுடியாது என்றும் முருகன் கூறியதால் தேன்மொழி அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் முருகன் வீட்டுக்கு அவர் தனது கைக்குழந்தையுடன் சென்றார். அங்கு வீட்டு முன்பு கைக்குழந்தையுடன் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி அறிந்த கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன், கிராம நிர்வாக அதிகாரி சுடர்செல்வன் மற்றும் போலீசார் அங்கு சென்று தேன்மொழியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கணவர் கூறுகிறார். இது அவருக்கு பிறந்தது தான். இதற்காக நான் டி.என்.ஏ. பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார். அவரை கடையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, உனது கணவர் ஒரு மாதத்தில் ஊருக்கு வருவார். அவருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தேன்மொழி பெற்றோர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.