சென்னை போக்குவரத்து போலீசில் பெண் போலீஸ் படை அமைப்பு - புதிய ரோந்து வாகனம் அறிமுகம்
சென்னை நகர போக்குவரத்து போலீசில் பெண் போலீஸ் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. புதிய ரோந்து வாகனமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் பெண்களின் வாகனங்களை சோதனை செய்யும் போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே சென்னை போக்குவரத்து போலீசில் பெண் போலீஸ் சிறப்பு படை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஒரு பெண் ஏட்டு மற்றும் 2 பெண் போலீஸ் இடம் பெறுவார்கள்.
சென்னையில் 4 போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர்கள் உள்ளனர். ஒவ்வொரு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் சரகத்திலும் தலா 4 பெண் சிறப்பு போலீஸ் படைகள் செயல்படும். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சிறப்பு பெண் போலீஸ் படைகள் செயல்படும்.
பெண்களின் வாகனங்களை சோதனை செய்தல், பெண்கள் நடத்தும் போராட்டங்கள் போன்றவற்றின் போது இவர்கள் பணியில் ஈடுபடுவார்கள். பெண்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளின் அருகில் இவர்கள் போக்குவரத்தை சீர் செய்வார்கள்.
இதேபோல சென்னை போக்குவரத்து போலீசில் ‘இ-ஸ்கூட்டர்’ எனப்படும் நவீன ரோந்து வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோந்து வாகனம் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பயன்படும். இந்த வாகனம் பேட்டரி மூலம் செயல்படும். 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் இந்த வாகனம் சென்று போக்குவரத்தை சரி செய்யும்.
இந்த ரோந்து வாகனம் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை சர்வீஸ் சாலைகளில் தற்போது பயன்படுத்தப்படும். முதல் கட்டமாக 10 ரோந்து வாகனங்கள் சென்னை போக்குவரத்து போலீசுக்கு வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து பெண் போலீஸ் சிறப்பு படை தொடக்க விழாவும், ‘இ-ஸ்கூட்டர்’ ரோந்து வாகனம் அறிமுக விழாவும் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு பெண் போலீஸ் சிறப்பு படையை முறையாக தொடங்கி வைத்தார்.
‘இ-ஸ்கூட்டர்’ ரோந்து வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர்கள் எழிழரசன், ஜெய் கவுரி, சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.