100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பளம் வழங்கக்கோரி மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பளம் வழங்கக்கோரி மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-12-18 22:30 GMT
மடத்துக்குளம்,

மடத்துக்குளம் அருகே உள்ள ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கீழ் ஜோத்தம்பட்டி ஊராட்சியின் மூலமாக 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து நிலுவை சம்பளத்தொகையை வழங்கக்கோரி மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 300-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் நேற்று திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ கண்ணன், கணியூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கணியூர் மற்றும் மடத்துக்குளம் போலீஸ் அதிகாரிகள் எந்தவித போராட்ட நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் திரண்டிருந்ததால் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் தொழிலாளர்களிடம், போலீஸ் அதிகாரிகள் கூறும் போது,தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. உங்கள் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் மனு வழங்கி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என எடுத்துரைத்தனர்.

இதையடுத்து 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மணிகண்டனிடம் மனு கொடுத்தனர். அவர்களுடன் ஊராட்சி ஒன்றிய ஆணையர், மற்றும் மடத்துக்குளம் வட்டார வளர்ச்சிஅலுவலர் சண்முகவதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், சதீஷ்குமார்,சாந்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது, ஜோத்தம்பட்டி ஊராட்சியில் பணியாற்றிவரும் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் கூடிய விரைவில் வழங்கப்படும் எனவும் மேலும் இப்பகுதியில் விடுபட்டுள்ள நபர்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்