கல்லூரி வகுப்பறையில் பேராசிரியை தற்கொலை - மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்

சென்னையில் உள்ள கல்லூரி வகுப்பறையில் முன்னாள் உதவி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-12-18 23:15 GMT
பூந்தமல்லி, 

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் கல்லூரி ஊழியர்கள் வகுப்பறைகளை சுத்தம் செய்தனர். அப்போது முதல் மாடியில் உள்ள தெலுங்கு வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது கை மணிக்கட்டு பகுதியிலும் வெட்டுக்காயம் இருந்தது.

இதுபற்றி அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்ணாநகர் உதவி கமிஷனர் சீனிவாசலு, அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தூக்கில் தொங்கிய பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தூக்கில் பிணமாக தொங்கிய பெண், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா, கரலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அரிசாந்தி(வயது 32) என்பதும், 2012-ம் ஆண்டு அவர், இந்த கல்லூரியில் தெலுங்கு பாடம் எடுக்கும் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்ததும் தெரிந்தது.

அதன்பிறகு அரசு பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்ததால், கல்லூரி பேராசிரியை வேலையை ராஜினாமா செய்துவிட்டு பெரம்பூரில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தினமும் ரெயில் மூலம் வேலைக்கு வந்து சென்றார்.

ஏற்கனவே இந்த கல்லூரியில் வேலை செய்தவர் என்பதாலும், இங்குள்ள பேராசிரியர்கள் மற்றும் தனது நண்பர்களை பார்ப்பதற்கு அரிசாந்தி அடிக்கடி கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் மதியம் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தவர், அதன்பிறகு தான் பாடம் நடத்திய வகுப்பறையில் தூக்கில் தொங்கி உள்ளார்.

அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இந்த கல்லூரிக்கு வெளியாட்கள் யார் வந்தாலும் அவர்கள் நுழைவு வாயிலில் உள்ள காவலாளியிடம் புகைப்படம் எடுத்து, நுழைவு சீட்டு வாங்கிய பிறகுதான் உள்ளே செல்ல முடியும். ஆனால் அரிசாந்தி உள்ளே சென்றதற்கான எந்தவித பதிவும் அங்கு இல்லை. நுழைவுவாயிலில் இருந்து நேராக அவர் கல்லூரிக்குள் நடந்து செல்வது போன்றுதான் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

அரிசாந்தி, சேலை அணிந்து உள்ள நிலையில், துப்பட்டாவால் தூக்குப்போட்டு உள்ளார். அவரது கை மணிக்கட்டு பகுதியிலும் வெட்டுக்காயம் உள்ளதால் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் யாரை பார்க்க கல்லூரிக்கு வந்தார்? எனவும், அவரது செல்போனை பறிமுதல் செய்து கடைசியாக அவர் யாரிடம் பேசினார்? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்