காரையாறில் ஆபத்தான மரப்பாலத்தை கடந்து செல்லும் காணி இன மக்கள்
காரையாறில் தினமும் ஆபத்தான மரப்பாலத்தை கடந்து சென்று வரும் காணி இனமக்கள், தங்கள் பகுதியில் பாதுகாப்பான பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம்,
பாபநாசம் காரையாறு மலைப்பகுதியில் உள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் காணி இன மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சின்னமயிலாறு, பெரியமயிலாறு என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் பகுதிக்கு தாமிரபரணி ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். பாபநாசம் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்படும் சமயங்களில் தங்கள் பகுதிக்கு செல்ல முடியாது. அங்குள்ள மரப்பாலத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் அவர்கள் சொரிமுத்து அய்யனார் கோவில் விலக்கு வழியாக சென்று வந்தனர். அங்கும் தண்ணீர் அதிக அளவில் வருவதால் சின்னமயிலாறு பகுதிக்கு செல்கின்ற பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இதனால் அந்த பகுதி மக்கள், மூங்கில் கம்பால் பாலம் அமைத்து அதன் வழியாக வந்து செல்கிறார்கள். பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் அந்த மூங்கில் கம்பு பாலத்தின் வழியாக தான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வருகிறார்கள். இது ஆபத்து நிறைந்த பயணமாகும். இந்த பகுதி மக்கள் தங்களுக்கு பாலம் அமைத்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.