வாக்குப்பதிவு தொடர்பாக, தேர்தல் பார்வையாளர் ஆய்வு

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவாடானையில் வாக்குப்பதிவு தொடர்பாக தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2019-12-18 22:15 GMT
தொண்டி,

திருவாடானை யூனியனில் வருகிற 27-ந் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையொட்டி ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர் அதுல் ஆனந்த் திருவாடானை யூனியன் அலுவலகத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்பு அறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 188 வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப் பெட்டிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குச்சாவடி மையங்கள் குறித்தும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் உடன் இணைத்து அனுப்பப்படும் உபகரணங்கள், பதிவேடுகள், ஆவணங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் வாக்குப்பதிவு அலுவலர்கள் விவரம் மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள் செல்லும் வழித்தடங்கள் அதற்கான வரைபடங்கள் குறித்து கேட்டறிந்த அவர் வரைபடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள இடம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வரைபடங்கள், வாக்கு எண்ணிக்கைக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

அதன் பின்னர் அலுவலகத்தில் தேர்தல் அமைதியாக நடைபெறுவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உம்முல் ஜாமியா, ராஜகோபாலன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்