இருசக்கர வாகனத்தில் ‘சைடு ஸ்டாண்டை’ எடுக்க மறந்ததால் விபத்து; பால்காரர் பலி
‘சைடு ஸ்டாண்ட்’ எடுக்க மறந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற பால் வியாபாரி விபத்தில் உயிரிழந்தார்.
புதூர்,
மதுரை ஊமச்சிகுளத்தை அடுத்த தவசிப்புதூரை சேர்ந்தவர் மாரி (வயது 50). விவசாயியான இவர் பால் வியாபாரமும் செய்து வந்தார். இவர் தினமும் அருகில் உள்ள கிராமம் மற்றும் நகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு பால் விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் பால் கேன்களை அடுக்கிக்கொண்டு வீட்டில் இருந்து மாரி புறப்பட்டார்.
அப்போது அவசரமாக சென்றதால் தனது இருசக்கர வாகனத்தின் ‘சைடு ஸ்டாண்டை’ எடுக்க மறந்துவிட்டதாக தெரிகிறது. நத்தம் மெயின் ரோட்டில் சென்றபோது சைடு ஸ்டாண்டு ரோட்டில் உரசி யதில் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த அவரை ஆம்புலன்சில் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்த னர். அங்கு மாரி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஊமச்சிகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், ‘‘வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். வாகனங்களில் அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டும் முன்பு ‘சைடு ஸ்டாண்டை’ மறக்காமல் எடுத்துச்செல்ல வேண்டும்’’ என்று அறிவுறுத்தினர்.