புத்தேரியில் சிறுத்தைபுலி நடமாட்டமா? பொதுமக்கள் பீதி வனத்துறையினர் ஆய்வு செய்ய கோரிக்கை

நாகர்கோவில், புத்தேரியில் சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-12-18 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் சிறுத்தைபுலி நடமாட்டம் இருந்து வருகிறது. ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுத்தைபுலி ஒரு ஆட்டை அடித்து கொன்றுவிட்டு தூக்கி சென்றது. இந்தசம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியது. இதுபோன்ற வன உயிரினங்கள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நள்ளிரவு நாகர்கோவில், புத்தேரி பராசக்தி கார்டனை ஒட்டியுள்ள வயல்வெளியில் சிறுத்தைபுலி வந்ததாக அப்பகுதியில் இருந்து தகவல் பரவியது. இதுபற்றி அறிந்த வனத்துறை அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

வனத்துறையினர் ஆய்வு

அப்போது அது சிறுத்தைபுலி இல்லை, விருது (காட்டு பூனை) என்று தெரிவித்தனர். இருப்பினும் அப்பகுதி மக்கள் அந்தவழியாக சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு செல்ல அச்சப்படுகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று புத்தேரி பெருமாள் நகர் பகுதியில் உள்ள வயல்வெளியில் சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பதாகவும், அதனை சிலர் கண்டதாகவும் தெரிவித்தனர்.

இதுபற்றி பூதப்பாண்டி வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன அலுவலர் திலீபன் தலைமையில் வன ஊழியர்கள் அங்கு சென்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

பொதுமக்கள் கோரிக்கை

அப்போது அங்கு வன விலங்கு ஒன்றின் கால்தடம் பதிவாகி இருந்தது. மேலும் அதனை ஆய்வு செய்தபோது அது விருது என்றும், சிறுத்தைபுலி அல்ல என்றும் வனதுறையினர் தெரிவித்தனர். இருப்பினும் அங்கிருந்த சிலர் அது சிறுத்தைபுலி போன்று தான் இருந்தது என கூறினா்.

இதற்கிடையே இந்ததகவல் அந்தபகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவத் தொடங்கியது. இதனால் அங்கு பொதுமக்கள் கூடினர். புத்தேரி பகுதியில் சிறுத்தைபுலி நடமாட்டம் உள்ளதா? என்று வனத்துறையினர் ஆய்வு செய்து மக்களின் பீதியை போக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்