ஊரக உள்ளாட்சி தேர்தல்: பதற்றமான ஒன்றியங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு

தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான ஒன்றியங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Update: 2019-12-18 22:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக 824 வாக்குச்சாவடிகளிலும், 2-வது கட்டமாக 994 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 1,818 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குச்சாவடிகள் முதல்கட்டமாக 64 மண்டலமாகவும், 2-ம் கட்டமாக 64 மண்டலமாகவும் மொத்தம் 128 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு மண்டலத்திலும் துணை தாசில்தார் நிலையிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திலும் 15 முதல் 20 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்கு பெட்டிகள் மற்றும் பல்வேறு பொருட்களை மண்டல குழுவினர் எடுத்து சென்று கொடுப்பார்கள். மாவட்டத்தில் 378 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. பதற்றமான ஒன்றிய பகுதிகளை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். அங்கு கூடுதல் பாதுகாப்பு, வெப்கேமரா, நுண்பார்வையாளர் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலருடன், வருவாய் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இன்று (வியாழக்கிழமை) மாலை வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வாக்குசீட்டுகள் அச்சடிக்கும் பணியும் தொடங்கப்பட உள்ளது. வாக்கு சீட்டு அச்சடிக்கும் பணிகள் 7 அச்சகங்களில் நடக்கிறது. இப்பணிகளை கண்காணிப்பு செய்து சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின்போது உள்ள விதிகளே இதற்கும் உள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கான முதல்கட்ட பிரசாரம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது. எனவே பிரசாரம் செய்ய தேவையான அனுமதிகளை அலுவலர்கள் போலீஸ் துறையுடன் ஒருங்கிணைந்து உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு என கூட்டம் நடத்தப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, உதவி கலெக்டர்கள் விஜயா (கோவில்பட்டி), தனப்பிரியா (திருச்செந்தூர்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சந்திரசேகரன் மற்றும் தாசில்தார்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்