விழுப்புரத்தில் 5 பேர் தற்கொலை சம்பவம் எதிரொலி: லாட்டரி வழக்கில் தேடப்பட்ட பஸ் அதிபர் கைது
விழுப்புரத்தில் 5 பேர் தற்கொலை செய்த சம்பவம் எதிரொலியாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் தேடப்பட்ட பஸ் அதிபர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளால் வீடு, சொத்துக்களை இழந்து வறுமையில் வாடிய நகை தொழிலாளி அருண், தனது 3 பெண் குழந்தைகளுக்கு பாலில் சயனைடு கலந்து கொடுத்து கொன்று விட்டு மனைவியுடன் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த துயர சம்பவத்தையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார், மாவட்டம் முழுவதும் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
விழுப்புரம் பகுதியில் மூன்று நம்பர் லாட்டரி வழக்கில் தேடபட்ட பஸ் அதிபர் ஸ்ரீதர் புதுவையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான தனிப்படையி னரால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.