கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில், வி‌‌ஷம் குடித்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை சாவு - திருக்கோவிலூர் அருகே பரபரப்பு

திருக்கோவிலூர் அருகே கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் வி‌‌ஷம் குடித்த கர்ப்பிணிக்கு பிறந்த ஆண்குழந்தை இறந்தது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-12-18 22:30 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆடூர்கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜே‌‌ஷ் (வயது 27). இவருக்கும் சந்தப்பேட்டையை சேர்ந்த மைதிலி(23) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கிடையே திருக்கோவிலூர் சந்தப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் மைதிலிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து மைதிலி, கணவரின் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் மணிகண்டனுடன் பெங்களூருவில் குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையே மைதிலி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதைத்தொடர்ந்து மணிகண்டனும், மைதிலியும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சந்தப்பேட்டைக்கு வந்தனர்.

அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. மேலும் மணிகண்டனின் உறவினர்கள் வடிவேல், காஞ்சனா, பட்டு ஆகியோர் சேர்ந்து மைதிலியை ஆபாசமாக திட்டியதுடன், வீட்டைவிட்டு வெளியேற்றியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மைதிலி வி‌‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார். 8 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் வி‌‌ஷம் குடித்ததால் தனது குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்று எண்ணிய மைதிலி, அருகில் உள்ள திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்ககாக சேர்ந்தார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து, ஆபரேசன் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த அடுத்த நாளே அந்த ஆண் குழந்தை இறந்தது. இதற்கிடையே வி‌‌ஷம் குடித்த மைதிலியின் நிலைமை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் மணிகண்டன் உள்பட 4 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்