விமர்சனங்களை இன்முகத்துடன் ஏற்று பணிகளை செய்ய பழக வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் சிவன் அருள் அறிவுரை
பொதுமக்களின் விமர்சனங்களை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு பணிகளை செய்ய பழகிக்கொள்ள வேண்டும் என திருப்பத்தூர் நகராட்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சிவன் அருள் அறிவுறுத்தினார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகராட்சியில் நடந்து வரும் திட்டப்பணிகளை துரிதப்படுத்துவது, பொதுமக்களின் தேவைகள், குறைகளை போக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது :-
புதிய மாவட்டமாக திருப்பத்தூர் உருவானதால் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதை புரிய முடிகிறது. திட்டங்களை அதிகமாக செயல்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. இது நமக்கு கூடுதலாக சிரத்தையுடன் பணிபுரிய வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த திட்டமாக இருந்தாலும் அதற்கான நிதியை பெற்றுத்தருகிறேன் என்று அமைச்சர் கே.சி.வீரமணியும் உறுதியளித்திருக்கிறார்.
தற்போது பாதாள சாக்கடை திட்டம் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எப்போது முடியும் என்று தெரியவில்லை. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் பணிகளை துரிதப்படுத்துங்கள். குப்பைகளை கொட்டுவது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்கள், தொண்டு நிறுவனங்களை அதற்கு பயன்படுத்தலாம். பழைய குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய இருக்கிறோம்.
பிற மாவட்டங்களில் பொருட்காட்சிகள் தொடங்கியிருக்கிறது. இங்கு அதைப்போன்று நடத்த போதுமான இடம் இருக்கிறதா? என ஆய்வு செய்யப்படும். பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும். அதற்கான இடமாக குப்பை கிடங்கை மாற்றிவிடலாமா? என்ற யோசனை உள்ளது. திருப்பத்தூரின் பெரிய ஏரி தூர்வாரப்படாமல் உள்ளது. காவிரி குடிநீர் கிடைக்கிறது என்பதற்காக அதை அப்படியே விட்டுவிடாமல், தூர்வாரி எதிர்கால தேவைக்காக அங்கு ஒரு கிணறு வெட்டி தண்ணீர் எடுக்க வழிவகை செய்யலாம்.
அனைத்து திட்டங்களும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தான் செய்ய வேண்டும். சாலை போக்குவரத்தை சீர்படுத்த பைபாஸ் ரோடு தான் ஒரே வழி என்று இல்லாமல், இருக்கும் சாலையை எப்படி சீரமைப்பது என்பது குறித்து யோசிக்க வேண்டும். இப்பணிகளை செய்ய ஒருவரே முடிவு செய்யாமல் பலரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அப்போது தான் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அதிகார தோரணையில் இல்லாமல் பக்குவமாக மக்களுக்கு எடுத்துரைத்தால் அவர்களே பணிகளை எளிதாக்கி விடுவார்கள்.
எனவே, அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். நமது மாவட்டத்துக்கு தேர்தல் இல்லை. அதனால், இப்பணிகளை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் எளிதாக செய்து முடிக்க முடியும். விமர்சனங்களை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டு பணிகளை செய்ய பழகிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் சுதா, சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர் விவேக் பணி மேற்பார்வையாளர் சீனிவாசன் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.