ஆற்காட்டில் செல்போனில் பேசியபடி நோயாளிக்கு ஊசி போட்ட நர்சு - நடவடிக்கை எடுக்க பரிந்துரை
ஆற்காடு அரசு மருத்துவமனையில் செல்போன் பேசியபடியே நோயாளிக்கு ஊசிபோட்ட நர்சு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆற்காடு,
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பணியில் இருந்த கல்பனா என்ற நர்சு மருத்துவமனைக்கு வந்த நோயாளி ஒருவருக்கு செல்போன் பேசியபடியே ஊசி போட்டுள்ளார்.
இதனைப் பார்த்த மருத்துவமனையில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். செல்போனில் பேசியபடியே ஊசி மருந்தை எடுக்கும்போது நோயை குணப்படுத்தும் மருந்துக்கு பதிலாக வேறு ஒரு மருந்தை செலுத்திவிடும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட அரசு மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பரிமளா தேவி மற்றும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர் சிவசங்கரி மற்றும் இரண்டு பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நர்சு கல்பனாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் அறிக்கையின்படி துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டு உயர்அதிகாரிகளுக்கு அனுப்பப்பட உள்ளது என தெரிவித்தனர்.