உரிய ஆவணங்கள் இல்லாமல், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் - தேர்தல் பார்வையாளர் பேச்சு

உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் பார்வையாளர் மோகன் பேசினார்.

Update: 2019-12-18 22:15 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. நீலகிரி மாவட்ட தேர்தல் பார்வையாளராக மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையாளர் மோகன் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் மோகன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை அல்லது புகார் இருந்தால் தேர்தல் பார்வையாளரிடம் 6383028272 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். நேரடியாக சந்திக்க வரும் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் காலை 10 மணி முதல் காலை 11 மணிக்குள் தமிழகம் மாளிகையில் என்னை சந்திக்கலாம்.

பிரச்சினைகளை தெரிவிக்க வரும் நபர்கள் கூட்டாக தெரிவிக்காமல் ஒரு நபர் தெரிவிக்கலாம். இதற்கு முன்அனுமதி பெற வேண்டும். வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை செலவினம் செய்யலாம். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் சுழற்சி முறையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரும் பணத்தை பறிமுதல் செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும் போது கூறியதாவது:-

நீலகிரியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் 64 வாக்குச்சாவடிகள் பதற்றமாகவும், ஒன்று மிகவும் பதற்றமாகவும் உள்ளன.

இதுகுறித்து மாவட்ட அளவிலான அதிகாரிகள் வாக்குப்பதிவு நடைபெறும் போது மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பார்கள். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பர்லியார் வழியாக குன்னூர் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் சோதனை செய்யப்படும். அதிக பணம் கொண்டு வருபவர்கள் அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

2 கட்டமாக நடைபெறும் தேர்தலில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் 48 மணி நேரத்துக்கு முன்பு போலீசாரிடம் அதற்கான அனுமதி பெற்றிருக்க வேண்டும். தேர்தலுக்கு வேட்பாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கான அனுமதியை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், வருவாய் அலுவலர் நிர்மலா மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்