டெல்லியில் மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதல் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுப்படுத்துகிறது - உத்தவ் தாக்கரே பேட்டி
டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.
நாக்பூர்,
டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்தது.
இது தொடர்பாக நேற்று நாக்பூரில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வேண்டுமென்றே சமுதாயத்தில் அமைதியின்மைக்கான சூழ்நிலையை உருவாக்க முயற்சி நடக்கிறது. டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய விதத்தை பார்த்தால், அது ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது.
இளம் தலைமுறையை தொந்தரவு செய்யும் எந்த நாடும் நிலையானதாக இருக்க முடியாது. இந்த நாட்டின் இளைஞர்களை சீர்குலைக்க வேண்டாம் என்று நான் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம். அவர்களிடம் நிறைய ஆற்றல் உள்ளது. இளைஞர்கள் வெடிகுண்டு போன்றவர்கள். அவர்களை தூண்டி விடக் கூடாது என பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். மராட்டியம் இதுவரை அமைதியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.