இலவச வேட்டி-சேலை வழங்குவது தொடர்பாக - நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை

இலவச வேட்டி-சேலை வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-12-17 23:19 GMT
புதுச்சேரி,

புதுவையில் இலவச பொருட்கள் வழங்குவது தொடர்பான பிரச்சினையில் பொருட்களுக்கு உரிய பணத்தை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் சேர்க்கவேண்டும் என்று கவர்னர் கூறி வருகிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் அறிவித்தபடி பொருளாக வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறுகிறார். இதனால் யார் சொல்வதை கேட்டு செயல்படுத்துவது? என்று தெரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தநிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கண்டிப்பாக இலவச வேட்டி-சேலை வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று கூட்டினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, நிதித்துறை செயலாளர் சுர்பிர் சிங் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது இந்த ஆண்டு இலவச வேட்டி-சேலை வழங்குவது தொடர்பான கோப்பினை தயார் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். அதற்கு தேவையான நிதி உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.

அதேபோல் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ள வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள், பாசிக் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோப்புகளை தயார் செய்யுமாறும், இந்த கோப்புகளை கவர்னருக்கு அனுப்ப தேவையில்லை என்றும் அமைச்சரவையிலேயே முடிவு செய்து அனுமதி வழங்குகிறோம் என்றும் அவர்களிடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்