புதுச்சேரி மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தமாட்டோம் - நாராயணசாமி உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தமாட்டோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2019-12-17 23:10 GMT
புதுச்சேரி,

புதுவை வடக்கு மாநில தி.மு.க. சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

குடியுரிமை சட்ட திருத்தம் மக்கள் வாழ்வாதாரத்தை பறிக்கின்ற சட்டம். இந்த சட்டத்தின் மூலம் மக்களை மத அடிப்படையில் பிரித்து இந்துத்துவா நாடாக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா அரசு முயற்சிக்கிறது. ஆனால் அது பலிக்காது.

இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.

மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அந்த மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தனது உயிரே போனாலும் அதை ஏற்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

அதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் குடியுரிமை சட்ட திருத்தத்தை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அதை நாங்கள் அமல்படுத்த மாட்டோம்.. ஆட்சியே போனாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அவைத்தலைவர் பலராமன், துணைஅமைப்பாளர்கள் குமார், சுந்தரி அல்லிமுத்து, பொருளாளர் செந்தில்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், லோகையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்