திண்டிவனம் அருகே, கார் மீது லாரி மோதல்; வனத்துறை அதிகாரி பலி - மகன் உள்பட 3 பேர் படுகாயம்
திண்டிவனம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வனத்துறை அதிகாரி பலியானார். அவரது மகன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள பரிகம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 72), ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி. இவரது மகன் செந்தில்(35) குடும்பத்துடன் அமெரிக்காவில் தங்கியிருந்து, அங்குள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செந்தில் தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு வர திட்டமிட்டார்.
இதையடுத்து அவர் தனது மனைவி லோகேஸ்வரியுடன்(27) விமானம் மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.
இதையொட்டி ஆறுமுகம் தனது மகன், மருமகளை அழைத்து வருவதற்காக ஒரு காரில் சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு அவர் தனது மகன், மருமகள் ஆகியோரை காரில் ஏற்றிக் கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார். காரை கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த பிரசாந்த்(27) என்பவர் ஓட்டினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சலவாதி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, முன்னால் சென்ற ஆம்னி பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அந்த சமயத்தில் கார் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்னி பஸ்சின் பின்பக்கம் மோதியது. அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆம்னி பஸ்சுக்கும், டிப்பர் லாரிக்கும் இடையே கார் சிக்கி அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் இருந்த ஆறுமுகம், செந்தில் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ரோஷணை போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். பின்னர் விபத்தில் சிக்கிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். செந்தில், லோகேஸ்வரி, டிரைவர் பிரசாந்த் ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.