குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சையில், அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சையில், அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார் தடியை சுழற்றி விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-17 23:00 GMT
தஞ்சாவூர், 

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், இந்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடிய ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதை அறிந்த பேராசிரியர்கள் சிலர் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு செல்லும்படி மாணவர்களை வலியுறுத்தினர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர்ந்து பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். பின்னர் மாணவர்கள் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வர முயற்சி செய்தனர்.

இதை பார்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென மாணவர்கள் சிலர், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்க முயன்றனர். ஆனால் மாணவர்கள் எழுந்து செல்ல மறுத்து விட்டதால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

உடனே கல்லூரி வளாகத்திற்குள் நின்ற மாணவர்களும் சாலைக்கு வந்து கோ‌‌ஷங்கள் எழுப்பினர். போலீசார் எவ்வளவு சொல்லியும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல மாணவர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து சில போலீசார் தடியை சுழற்றி மாணவர்கள் மீது அடிக்காமல் தரையில் அடித்தனர். இதனால் மாணவர்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர்.

அவர்களை பின்தொடர்ந்து போலீசாரும் தடியை எடுத்து கொண்டு விரட்டி சென்றனர். மற்ற போலீசாரும் தடியுடன் வந்ததால் தடியடி நடத்தக்கூடிய சூழ்நிலை உருவானது. ஆனால் போலீசார் தடியடி நடத்தாமல் தடியை சுழற்றி மாணவர்களை விரட்டி சென்று கலைந்து செல்ல வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளில் பாதிபேர் கல்லூரிக்கு சென்றனர். மீதமுள்ளவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு வீட்டிற்கு சென்றனர்.

மாணவர்கள் கல்லூரிக்குள் சென்றபிறகு நுழைவு வாயில் கதவை போலீசார் மூடினர். அதன்பின்னர் அடையாள அட்டையை காண்பித்த மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்