திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 13,231 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு - 211 மனுக்கள் நிராகரிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 13,231 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 211 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 151 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 1,306 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2,645 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9,340 பேரும் என மொத்தம் 13,442 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வேட்பு மனு பரிசீலனை நேற்று நடந்தது. முடிவில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 11 பேர், ஒன்றியக்குழு உறுப்பினர் 82 பேர், கிராம ஊராட்சி மன்ற தலைவர் 40 பேர், கிராம ஊராட்சி உறுப்பினர் 78 பேர் என மொத்தம் 211 வேட்பு மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து 13,231 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து நாளை (வியாழக்கிழமை) வேட்பு மனு வாபஸ் பெறப்படுகிறது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல், அவர்கள் போட்டியிடும் சின்னத்துடன் அறிவிக்கப்பட உள்ளது.