நாகை அருகே, தொழிலாளியை கழுத்தை நெரித்து கொன்ற 2 பேர் கைது
நாகை அருகே தொழி லாளியை கழுத்தை நெரித்து கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் பிணம் கிடப்பதாக நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இறந்தவரின் கைப்பகுதியில் குளுக்கோஸ் ஏற்றியதற்கான அடையாளம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து உடலை பரிசோதனை செய்த டாக்டர் குழுவினர் அவரது கழுத்து மற்றும் கை பகுதிகளில் காயம் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் இவர் கொலை செய்யபட்டுள்ளார்? என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இந்த வழக்கை நாகை டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜசேகரன்(வயது 39) என்பதும், இவர் மீது நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நாகை டவுன் போலீசார்
ராஜசேகரனின் நண்பர்களான நாகை வெளிப்பாளையம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த ஜெயபாண்டி (39), வெளிப்பாளையம் நண்டுகுளம் ரோடு பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி (29) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 2 பேரும் போலீசாரிடம் கூறியதாவது:-
ராஜசேகரன் உள்பட நாங்கள் எல்லோரும் நண்பர்கள். கடந்த செப்டம்பர் மாதம் நாகை புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் படுத்து இருந்த பிச்சைகாரரை ராஜசேகரன் அடித்து அவர் வைத்திருந்த பணத்தை பிடுங்கினார். அப்போது நாங்கள் அதை தடுத்தோம். உடனே ராஜசேகரன் எங்களை அடித்து அவமானம் செய்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதில் ஆத்திரமடைந்த நாங்கள் ராஜசேகரனை தேடி வந்தோம். அப்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
நாங்கள் அவரை சென்று பார்த்து வந்தோம். ஆனால் ராஜசேகரன் எங்கள் மீது கோபமாக இருந்தார். உடனடியாக காரைக்கால் பகுதியை சேர்ந்த எங்களது நண்பர்கள் உதவியுடன் சமாதானம் பேச ராஜசேகரனை ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து வர செய்தோம். நாகை கலங்கரை விளக்கம் அருகே கடற்கரையில் வைத்து ராஜசேகரனுடன் சேர்ந்து மது அருந்தினோம். அப்போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் 2 பேரும் சேர்ந்து ராஜசேகரனின் கழுத்தை நெரித்து கொலை செய்து கடலில் வீசினோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.