குடியுரிமை சட்ட திருத்தம்: மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் திண்டுக்கல்லில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-17 21:45 GMT
திண்டுக்கல்,

மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேசுகையில், தொழில்துறை மோசமாகி, நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து விட்டது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. அதை சரிசெய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், குறுகிய மனப்பான்மையுடன், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனால் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமை பறிபோகும். எனவே, குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், என்றார்.

இதில் வேலுச்சாமி எம்.பி., ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் பசீர்அகமது, துணை செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சிறுபான்மையினர் மற்றும் ஈழ தமிழர்களை பாதிக்கும் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டனர்.

மேலும் செய்திகள்