மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம்

மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது.;

Update: 2019-12-17 23:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியத்தொகை. வீட்டுமனை பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, ரேஷன்கார்டு, பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை என பல கோரிக்கைகள் அடங்கிய 210 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்தையும் கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த கூட்டத்தில், வருவாய்த்துறை சார்பாக சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பாக 6 நபர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.13,500- மதிப்புடைய 3 சக்கர நாற்காலியை கலெக்டர் பொன்னையா வழங்கினார். மேலும் அரசு ஆதரவற்றோர் பள்ளியை சேர்ந்த 44 மாணவ- மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டையை கலெக்டர் வழங்கினார்.

காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக பணியின் போது காலமான 2 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, சார் ஆட்சியர் சரவணன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) டி.ஸ்ரீதர், தனித்துணை கலெக்டர் மாலதி, முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்ட அலுவலர் மணிகண்டன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்