குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த திரண்டதால் பரபரப்பு
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கே.கே.நகர்,
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். திருச்சி பாலக்கரையில் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே உள்ள ஜமால் முகமது கல்லூரியில் மாணவர்கள் நேற்று பிற்பகல் 12.45 மணி அளவில் போராட்டம் நடத்த திரண்டனர். மேலும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் போராட்டம் நடத்த அனுமதியில்லை என தெரிவித்தனர்.
இதற்கிடையில் மாணவர்கள் திரண்டது குறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் விரைந்து வந்து கல்லூரிக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்காததால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதேபோல பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் நடத்த திரண்டனர். ஆனால். அவர்கள் போராட்டம் நடத்தாமல் கலைந்து சென்றனர்.