முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 92 வயது மூதாட்டி தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்பு
முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 92 வயது மூதாட்டி தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் மருமகளுக்காக தனது மனுவை வாபஸ் பெறுகிறார்.
ஆட்டையாம்பட்டி,
தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசி நாள் ஆகும். சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட அதே பகுதியை சேர்ந்த அழகேச பூபதி என்பவரின் மனைவி கனகவள்ளி (வயது 92) என்பவர் வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தள்ளாத வயதிலும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கனகவள்ளி வேட்பு மனு தாக்கல் செய்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது. இது குறித்து கனகவள்ளி கூறியதாவது:-
எனது கணவர் அழகேசபூபதி முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக 4 முறை பதவி வகித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டார். மேலும் எனது மகன் பார்த்தசாரதி 20 ஆண்டுகளாக ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நான் தலைவராக இருந்துள்ளேன். கடந்த 45 ஆண்டுகளாக எங்களது குடும்பத்தினர் மட்டுமே ஊராட்சி தலைவராக இருந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். தொடர்ந்து மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த முறையும் எங்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள். மேலும் எனது மருமகள் புஷ்பாவும் (52) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிைடயே நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது மூதாட்டி கனகவள்ளியின் மனுவும், அவரது மருமகள் புஷ்பாவின் மனுவும் ஏற்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேட்பு மனு வாபஸ் பெற நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இது குறித்து கனகவள்ளியின் மகன் பார்த்தசாரதி கூறும் போது, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு எனது மனைவி புஷ்பா தான் போட்டியிடுகிறார். அவரது மனு தள்ளுபடியானால் எங்களது குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடமுடியாது. எனவே 92 வயதான எனது தாயாரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது 2 பேரின் மனுவும் ஏற்கப்பட்டதால், எனது தாயார் கனகவள்ளி வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று தெரிவித்தார்.