திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - கலெக்டர் சிவன்அருள் உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு குறித்து திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார், திருப்பத்தூர் சப்-கலெக்டர் வந்தனா கார்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் சிவன்அருள்பேசியதாவது:-
திருப்பத்தூர் புதிய மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வாணியம்பாடியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட உள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
திருப்பத்தூரில் பெரிய வகை கன்டெய்னர் லாரிகள் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள காலை, மாலை நேரங்களில் நகருக்குள் உள்ளே வர அனுமதியில்லை. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த காவல் துறையிடம் சம்பந்தப்பட்டவர்கள் தேவையான அனுமதியை பெற வேண்டும்.
போலீசார் கூறிய இடத்தில் தான் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்த வேண்டும். அனைத்து ஊர்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மாவட்டத்திற்கு விரைவில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்வார்கள். நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் வாகனம் ரோந்து பணியில் ஈடுபட்டு போக்குவரத்தையும் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கவேல், சச்சிதானந்தம், திருப்பத்தூர் சுகாதார துைண இயக்குனர் டாக்டர் கே.எஸ்.டி.சுரேஷ், தாசில்தார்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தேசிய நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையாளர்கள், துப்புரவு அலுவலர்கள் உள்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.