ராமநாதபுரம் அருகே, நூதனமுறையில் பறவைகள் வேட்டை - தந்தை,மகன் சிக்கினர்

ராமநாதபுரம் அருகே நூதன முறையில் பறவைகளை பாடம் செய்து அதன்மூலம் பறவைகளை வேட்டையாடிய தந்தை - மகன் சிக்கினர். அவர்களிடம் பறவைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

Update: 2019-12-17 22:15 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருவதால் பருவநிலை மாற்றம் காரணமாக பறவைகள் தங்களுக்கு ஏற்ற சூழ்நிலை என கருதி அதிகஅளவில் வந்த வண்ணம் உள்ளன. இந்த பறவைகள் நீர்நிலைகளில் உள்ள மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு வரும் பறவைகளை சில சமூக விரோதிகள் லாப நோக்கத்திற்காக வேட்டையாடி பிடித்து வந்து விற்பனை செய்துவருகின்றனர்.

இதுபற்றி அறிந்த வன பாதுகாவலர் அசோக்குமார் உத்தரவின்பேரில் வனச்சரகர் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரம் அருகே இளமனூர் பகுதியில் நீர்நிலைகளின் அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் அண்ணாநகர் கூனியப்பன் மகன் வீரன்(வயது75), அவரின் மகன் முத்து(45) என்பதும், இருவரும் அந்த பகுதியில் நீர்நிலைகளில் இரைதேடி வரும் பறவைகளை வேட்டையாடி பிடித்து கொண்டிருப்பதும் தெரிந்தது.

இதற்காக இவர்கள் நூதன முறையை கையாண்டு பறவைகளை வேட்டையாடுவதை வனத்துறையினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே வேட்டையாடப்பட்ட பச்சைக்கால் விரல் உள்ளான் பறவையை அப்படியே பாடம் செய்து அதன் உள் பகுதியில் பஞ்சு உள்ளிட்டவைகளை வைத்து பறவை உயிருடன் இருப்பது போல் தயார் செய்துள்ளனர். இந்த பொம்மை பறவைகளை வலைகளின் மேல் கம்பியில் குத்தி நிற்க வைத்து வலைகளின்மேல் இரைகளை போட்டுவிடுகின்றனர். இந்த பறவைகளை பார்க்கும் அதே இன பறவைகள் அந்த இடத்தில் இரை இருப்பதாக கருதி தங்களின் கூட்டத்தினை நோக்கி படையெடுத்து வருகின்றன.

அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்து வலைகளை இழுத்து அப்படியே ஒட்டுமொத்தமாக பறவைகளை மடக்கி பிடித்து வேட்டையாடி விடுகின்றனர். இந்த முறையை பயன்படுத்தியே தந்தையும் மகனும் பறவைகளை வேட்டையாடி கொண்டிருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 16 உள்ளான் பறவைகள் மற்றும் பாடம் செய்யப்பட்ட 15 பொம்மை பறவைகள், வலைகள், 2 கிலோ கம்பிகள் உள்ளிட்டவைகளை வனத்துறையினர் கைப்பற்றினர். இந்த பறவைகளை வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறையினர் காரங்காடு பகுதியில் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர். பறவைகளை நூதன முறையில் வேட்டையாடிய ஆகிய இருவரையும் பிடித்து வந்த வனத்துறையினர் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்