மது பாட்டில்களுக்கு பணம் தர மறுத்து: மதுக்கடை மீது வெடிகுண்டு வீசிய 3 ரவுடிகள் - துப்பாக்கி முனையில் கைது

திருபுவனை அருகே வாங்கிய மது பாட்டில்களுக்கு பணம் தர மறுத்து மதுக்கடை மீது வெடிகுண்டு வீசிய ரவுடிகளை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-17 00:18 GMT
திருபுவனை,

திருபுவனை அருகே திருவண்டார்கோவிலில் தனியார் மதுபானக் கடை உள்ளது. இங்கு சேதராப்பட்டை சேர்ந்த பாஸ்கர் (வயது 42) என்பவர் கே‌ஷியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் இந்த மதுக்கடைக்கு 3 வாலிபர்கள் ஒரு மொபடடில் வந்தனர். அங்கிருந்த பாஸ்கரிடம் 3 மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். அவர்களிடம் வாங்கிய மது பாட்டில்களுக்கு பாஸ்கர் பணம் கேட்டுள்ளார்.

அப்போது அந்த ஆசாமிகளில் ஒருவர், நாங்களே பெரிய ரவுடி எங்களிடம் பணம் கேட்பதா? என்று கூறி தனது கையில் இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை மதுக்கடையின் சுவர் மீது வீசினார். இதில் அந்த குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் கேஷியர் பாஸ்கரனும் அங்கு வந்திருந்த மற்ற வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் வெடிகுண்டுகள் வீசிய ஆசாமிகள் மொபட்டில் ஏறி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டு அங்கிருந்த மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். வெடிகுண்டுகள் வீசியதில் மதுக்கடையின் முன்பக்க சுவர் மட்டும் சேதமானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. அங்கு வெடித்துக் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளின் துகள்களை நிபுணர்கள் ஆய்வுக்காக சேகரித்தனர்.

மதுக்கடை மீது வெடிகுண்டு வீசியவர்களை அடையாளம் காண்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். அவர்கள் திருபுவனை பகுதியை சேர்ந்த ரவுடிகளான பிடாரிக்குப்பம் அர்ச்சுனன் மகன் விக்னேஷ் (வயது 21), இளங்கோவன் மகன் கதிர் (19), ரத்தினவேல் மகன் முகேஷ் (19) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின்பேரில் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். விக்னேஷ் உள்பட 3 பேரும் பண்ணக்குப்பம் ஏரிக்கரையில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் பார்த்தசாரதி, நடராஜன், வீரபாலு ஆகியோர் விரைந்து சென்று ஏரிக்கரையில் பதுங்கியிருந்த 3 பேரையும் சுற்றி வளைத்தனர்.

அவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தற்காப்புக்காக வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து ரவுகளை நோக்கி நீட்டினார். இதையடுத்து அவர்கள் நகராமல் அங்கேயே நின்றனர். பின்னர் 3 பேரும் கைது செய்யப் பட்டு, போலீஸ் நிலையம் அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகள், ஒரு மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

மது பாட்டில்கள் வாங்கியதற்கு பணம் கேட்டதற்காக மதுக்கடை மீது வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் திருபுவனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கரும்புத் தோட்டத்தில் பதுங்கி இருந்த ரவுடி ஜனா மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க போலீசார் முயன்ற போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் வெடிகுண்டு வீசி விட்டு அந்த கும்பல் தப்பியது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய ஜனா உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

தற்போது வாங்கிய மது பாட்டில்களுக்கு பணம் கேட்டதற்காக மதுக்கடை மீது வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பியுள்ளனர். இவர்களுக்கு வெடிகுண்டு கிடைப்பது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

புதுவையில் ரவுடிகளான வாணரப்பேட்டை சாணிக்குமார், அரியாங்குப்பம் பாண்டியன், முத்தியால்பேட்டை அன்பு ரஜினி, பொதுப்பணித்துறை ஊழியர் லோகநாதன் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பழிக்குப்பழியாக தனித்தனியே நடந்த இந்த சம்பவங்களில் முதலில் வெடிகுண்டுகளை வீசி நிலைகுலையச் செய்து அதன்பிறகு வெட்டிக் கொலை செய்தனர். தற்போது மதுக்கடை மீது வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுபோல் ரவுடிகளிடம் சர்வ சாதாரணமாக வெடிகுண்டுகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன.

இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் இரும்புக்கரம் கொண்டு வெடிகுண்டு கலாசாரத்தை ஒடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்