கன்னியாகுமரிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 25-ந்தேதி வருகை
கன்னியாகுமரிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 25-ந்தேதி வருகிறார். அவர் விவேகானந்தர் மண்டப பொன்விழாவில் பங்கேற்கிறார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள பாறையில் பகவதி அம்மனின் பாத தடம் பதிந்து உள்ளது. அந்த பகுதிக்கு 1892-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந்தேதி சுவாமி விவேகானந்தர் சென்று, 3 நாட்கள் தியானம் செய்தார். அதை நினைவு கூறும் வகையில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறையில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. அதை 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில், ஜனாதிபதி வி.வி.கிரி திறந்து வைத்தார். இந்த நினைவு மண்டபத்தை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா நிர்வகித்து வருகிறது.
தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகிறார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் 3 படகுகளை இயக்கி வருகிறது. விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி தொடங்கியது. பொன்விழாவை ஒரு ஆண்டு கொண்டாட விவேகானந்த கேந்திரா முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கேந்திர நிர்வாகிகள் சந்தித்தனர். பொன்விழா கொண்டாட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். அதன் பிறகு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரையும் விவேகானந்த கேந்திர துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் பொதுச்செயலாளர் பானுதாஸ், துணைத்தலைவர் நிவேதிதா, இணை பொதுச்செயலாளர் பிரவின் தபோல்கர், துணை பொதுச்செயலாளர் ரேகாதவே ஆகியோர் சந்தித்தனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் வருகிற 25-ந்தேதி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா நடக்கிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு காலை 9 மணிக்கு வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். மதியம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். மாலையில் விவேகானந்தர் மண்டப பொன்விழாவில் கலந்து கொள்கிறார். இரவு கன்னியாகுமரியில் ஓய்வு எடுக்கிறார். 26-ந்தேதி காலை பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன்பிறகு ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
மேற்கண்ட தகவலை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ் தெரிவித்தார்.