நோய்கொடுமை காரணமாக கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை
திருப்பூரில் வயிற்றுவலி காரணமாக கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-;
வீரபாண்டி,
திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள வித்தியாலயம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது 46), பெயிண்டர். இவருடைய மனைவி குமாரி (38). இவர்களுக்கு தீபக் (21) என்ற மகனும், வினிஷா (18) என்ற மகள் இருந்தனர். தீபக் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வினிஷா திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக சிகிச்சையும் அவ்வப்போது எடுத்து வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை.
நேற்று முன்தினம் திடீரென்று வயிற்றுவலி அதிகமானதால் வலி தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் (சாணிப்பவுடர்) குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த தீபக் தகவல் அறிந்து உடனடியாக வினிஷாவை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்தபோது மாணவி மருத்துவமனைக்கு வரும் வழியில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து திருப்பூர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வயிற்று வலி காரணமாக கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.