திருவள்ளூர் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 16,672 பேர் வேட்பு மனு தாக்கல்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், போடியிட இதுவரை மொத்தம் 16 ஆயிரத்து 672 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Update: 2019-12-16 22:30 GMT
திருவள்ளூர்,

உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய 2 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 24 மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கும், 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 230 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கும், ஊராட்சி மன்ற தலைவர் 526 பதவிக்கும் வார்டு உறுப்பினர் 3,945 பதவி உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 725 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி அன்று தொடங்கியது.

இந்நிலையில், வேட்புமனுத்தாக்கலின் கடைசி நாளான நேற்று திருவள்ளூர் மற்றும் கடம்பத்தூர் பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மாவட்ட குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளர்கள் கூட்டம் அலைமோதியது.

இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கூட்ட நெரிசலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட 124 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 1,098 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட 1, 007 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 4,679 பேரும் என மொத்தம் 6 ஆயிரத்து 908 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 7 நாட்களாக நடைபெற்ற வேட்புமனுதாக்கல் முடிவடைந்த நிலையில், போட்டியிட இதுவரை மொத்தம் 16 ஆயிரத்து 672 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்