உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. மக்களை நம்பித்தான் ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. மக்கள்தான் அனைவருக்கும் எஜமானர்கள். ஆனால், தி.மு.க. கார்ப்பரேட் நிறுவனமாக செயல்படுவதாக கூறி, அந்த கட்சியில் இருந்த பழம்பெரும் அரசியல்வாதி பழ.கருப்பையா அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். உள்ளாட்சி தேர்தலில் மக்களை சந்திக்க பயந்த தி.மு.க. கடைசி வரையிலும் சுப்ரீம் கோர்ட்டில் சென்று போராடி, தேர்தலை நிறுத்த முயன்றது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பு வழங்கி உள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. 90 சதவீதத்துக்கு அதிகமான இடங்களில் வென்றது. அதேபோன்று ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. 90 சதவீதத்துக்கு அதிகமான இடங்களில் அமோக வெற்றி பெறும்.
குடியுரிமை சட்டத்தினை அ.தி.மு.க. ஆதரித்தாலும், ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி உள்ளோம். எந்த சட்டத்தையும் புதிதாக இயற்றும்போது சில மாறுபட்ட கருத்துகள் எழும். பின்னர் அந்த சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்வது இயற்கை.
குடியுரிமை சட்டத்தால் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதற்காகவும் வருகிற 19-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும்போது வலியுறுத்துவார்.
அதேபோன்று தீப்பெட்டி தொழிலுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக குறைப்பதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அவரும் பரிசீலனை செய்து விரைவில் நல்ல முடிவினை தெரிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.