பண்ணாரி சோதனை சாவடி அருகே, செல்பி எடுத்தவரை விரட்டிய யானை
பண்ணாரி சோதனை சாவடி அருகே செல்பி எடுத்தவரை யானை விரட்டியது.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனை சாவடி அருகே ரோட்டை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் யானைகள் சோதனை சாவடி அருகே ரோட்ேடாரத்தில் உள்ள மரங்களின் கிளைகளை முறித்து சாப்பிடும்.
இதை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய செல்போன் மற்றும் கேமராவில் புகைப்படம் எடுப்பர்.
இந்தநிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மற்றும் ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் கோபியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை வந்து உள்ளனர். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் ஒரு வேனை வாடகைக்கு எடுத்து சுற்றுலா சென்றனர். குண்டேரிப்பள்ளம் அணை, கொடிவேரி அணை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு சத்தியமங்கலம் வனப்பகுதியை சுற்றி பார்க்கவும் சென்றனர். நேற்று மாலை 5 மணி அளவில் பண்ணாரி சோதனை சாவடி அருகே சென்றபோது ரோட்டோரம் யானைகள் தங்களுடைய குட்டிகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டதும் வேனில் இருந்து இறங்கி யானைகளை வேடிக்கை பார்த்தனர்.
அதில் ஒருவர் செல்போன் மூலம் யானைகளை புகைப்படம் எடுத்தார். மேலும் அவர் ஆர்வ மிகுதியால் செல்பியும் எடுக்க முயன்றார். அப்போது ஒரு யானை ஆவேசத்துடன் பிளிறியபடி வந்தது. இதைக்கண்டதும் திடுக்கிட்ட அவர் ஓடிச்சென்று வேனில் ஏறிக்கொண்டார். இதைத்தொடர்ந்து அந்த வேன் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் பெண் யானை ஒன்று தனது குட்டியுடன் பண்ணாரி சோதனை சாவடி அமைந்துள்ள ரோட்டில் நின்றது. அப்போது அந்த குட்டி யானை தனது தாயிடம் பால் குடிக்க தொடங்கியது. இதனால் அந்த யானை எங்கும் நகராமல் அப்படியே நடுரோட்டில் நின்று விட்டது. இதன்காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் ரோட்டின் இருபுறமும் அணி வகுத்து நின்றன.
வாகன ஓட்டிகள் ஏர்ஹாரன் அடித்தும் அந்த யானை அங்கிருந்து நகரவில்லை. பின்னர் அந்த யானை 12.30 மணி அளவில் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.