தஞ்சையில் துணிகரம்: டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் மிரட்டி ரூ.4 லட்சம் கொள்ளை

தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் மிரட்டி ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மூகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-12-16 23:00 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை விளார் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் டவுன் கரம்பை வடக்கு தெருவை சேர்ந்த சிவக்குமார் மற்றும் சீனிவாசன் ஆகியோர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்தவுடன் மது விற்ற பணத்தை இவர்கள் எண்ணிக் கொண்டு இருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 முகமூடி கொள்ளையர்கள் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர்.

திடீரென அவர்கள் கடையின் முன்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை அடித்து உடைத்தனர். பின்னர் கடை கதவை திறக்க சொல்லி விற்பனையாளர்களை மிரட்டினர். இதனால் பயந்துபோன விற்பனையாளர்கள் வேறுவழியின்றி கடையை திறந்து விட்டனர்.

உடனே கடைக்குள் புகுந்த அவர்கள், அங்கு பணம் எண்ணிக் கொண்டிருந்தவர்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்தை கொள்ளையடித்து கொண்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து கடை ஊழியர்கள் தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையடிக்க வந்தவர்களுக்கு சுமார் 30 வயது இருக்கும் என்பது தெரிய வந்தது.

மேலும் கேமரா உடைக்கப்படுவதற்கு முன்பாக கொள்ளையர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளையை தடுக்க ஊழியர்கள் எந்த முயற்சியும் எடுக்காததால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கொள்ளையில் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என விசாரணை நடத்தினர்.

ஆனால் அவர்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்