தஞ்சை அருகே, நிலத்தகராறில் சித்தப்பாவை கட்டையால் அடித்துக்கொன்ற வாலிபர் கைது

தஞ்சை அருகே நிலத் தகராறில் சித்தப்பாவை கட்டையால் அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-16 22:45 GMT
தஞ்சாவூர், 

தஞ்சையை அடுத்த கூடலூர் பெரிய தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ்(வயது 65). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதன்பிறகு ஏ.டி.எம். காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருடைய அண்ணன் பெருமாள் மகன் நீதிபதி(30). இவர்கள் இருவருடைய வீடுகளும் அடுத்தடுத்து உள்ளன. இரண்டு வீடுகளுக்கும் அருகில் உள்ள 5 அடி நிலம் தொடர்பாக இவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்தது.

இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினை கடந்த 25 ஆண்டுகளாக உள்ளது. நிலப்பிரச்சினையை பேசி தீர்த்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு கோவிந்தராஜ் வீட்டிற்கு நீதிபதி சென்றார்.

வீட்டில் இருந்த கோவிந்தராஜிடம் நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம். சமரசமாக செல்வோம் என கூறியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இருவரும் ஒருவருக் கொருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த நீதிபதி, அருகில் கிடந்த கட்டையை எடுத்து கோவிந்தராஜை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்த நீதிபதி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். நீதிபதியின் பெற்றோர் பெருமாள், கனகாம்பாள் ஆகியோரும் வீட்டை பூட்டிவிட்டு கூடலூரில் இருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் மயங்கி கிடந்த கோவிந்தராஜை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கோவிந்தராஜ் மகன் ராஜ் குமார், தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதி பதியை கைது செய்தனர். மேலும் கொலை செய்ய தூண்டியதாக நீதிபதியின் பெற்றோர் பெருமாள், கனகாம்பாள் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்