திருச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய குவிந்த அரசியல் கட்சியினர்

திருச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாளான நேற்று அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் குவிந்தனர். டோக்கன் கொடுத்து காத்திருக்க செய்தனர்.

Update: 2019-12-16 22:30 GMT
ஜீயபுரம்,

திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதியில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி, ஊராட்சி ஒன்றிய (பஞ்சாயத்து யூனியன்) வார்டு உறுப்பினர் பதவி, கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 27-ந் தேதி மற்றும் 30-ந் தேதி என 2 கட்டங்களாக நடக்கிறது.

முதல் கட்டமாக 27-ந் தேதி அந்தநல்லூர், மணப்பாறை, மணிகண்டம், மருங்காபுரி, திருவெறும்பூர், வையம்பட்டி ஆகிய 6 ஊராட்சி ஒன்றிப் பகுதிகளிலும், 2-ம் கட்டமாக 30-ந் தேதி லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியப்பகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது.

வேட்பு மனுதாக்கல் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கியது. கடந்த 14-ந் தேதி வரை திருச்சி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 47 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 542 பேரும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1,477 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,511 பேரும் என மொத்தம் 7,577 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாள் ஆகும். அ.தி.மு.க., தி.மு.க.வினர் தங்களது கூட்டணி கட்சியினருக்கு வார்டுகளை ஒதுக்கி வேட்பாளர்கள் பட்டியல் கடந்த சனிக்கிழமையன்று தான் அறிவிக்கப்பட்டது. எனவே, அனைத்து அரசியல் கட்சியினரும், பெரும்பாலான சுயேச்சைகளும் கடைசிநாளான நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், திருவெறும்பூர் உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதனுடன் ஆதார் அடையாள அட்டைக்கான நகல் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஒரு நபருக்கு மட்டுமே நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.

இதனால் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு வேட்புமனுக்களை சரிபார்ப்பதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களிடம் ‘டோக்கன்’ கொடுத்து, காத்திருக்க செய்தனர். பின்னர் டோக்கன் எண்ணை அழைத்து வேட்பு மனுக்களை பெற்றனர்.

அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் அ.தி.மு.க. வேட்பாளர்களுடன் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார் மற்றும் திரளான அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் மேளதாளத்துடன் வந்தனர். இதுபோல தி.மு.க. வேட்பாளர்களும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுடன் மனு தாக்கல் செய்ய வந்தனர். இதுபோல திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரத்தினவேல் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மனு தாக்கல் செய்ய திரண்டு சென்றனர். இதுபோல தி.மு.க. வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் சென்று மனு தாக்கல் செய்தனர்.

டோக்கன் முறை வழங்கப்பட்டதால், சில இடங்களில் வேட்பு மனுக்களை மாலை 5 மணிக்கு மேலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெற்றனர். நேற்று இறுதி நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. வேட்பு மனுக்களுக்கான பரிசீலனை இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெறும். 19-ந்தேதி மாலை இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 19-ந் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் வாங்குபவர்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்.

மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய, நேற்று காலை 10 மணியில் இருந்து வேட்பாளர்கள் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன், மண்ணச்சநல்லூரில் உள்ள காந்தி சிலையில் இருந்து கட்சி கொடிகளுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து, ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். கட்சியினர் ஊர்வலமாக வந்தபோது பட்டாசுகளும் வெடித்தனர். சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தனர். ஒரே நேரத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., புதிய தமிழகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட ஏராளமானோர் மனு தாக்கல் செய்ய குவிந்தனர். இதனால் மண்ணச்சநல்லூரில் நேற்று கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் துறையூரில் இருந்து மண்ணச்சநல்லூர் வழியாக திருச்சிக்கு சென்ற தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கட்சி தொண்டர்களை கூட்டமாக நிற்க வேண்டாம், கலைந்து செல்லுங்கள் என்று கூறி போக்குவரத்தை சரி செய்தனர்.

திருவெறும்பூர் ஒன்றியத்தில் நேற்று மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 5 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 74 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 55 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 266 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதன்படி திருவெறும்பூர் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 7 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 119 பேரும், தலைவர் பதவிக்கு 144 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 629 பேரும் என மொத்தம் 899 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்