பொது வழி தகராறில் தாய்- மகன் தீக்குளிக்க முயற்சி - ராணிப்பேட்டையில் பரபரப்பு

ராணிப்பேட்டையில் பொது வழி தகராறில் தாயும், மகனும் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-16 22:15 GMT
சிப்காட்( ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை வேலு முதலி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 39). ராணிப்பேட்டை கந்தசாமி தெருவில் வசிப்பவர் தனபாக்கியம் (53). இருவரும் உறவினர்கள். இவர்கள் இருவரும் வசிக்கும் தெருக்கள் வேறுவேறாக இருந்தபோதிலும் பாஸ்கரின் வீட்டுபின்புறத்தில் தான் தனபாக்கியத்தின் வீடு உள்ளது.

இருவரின் வீட்டிற்கு மத்தியில் பொது வழி உள்ளது. இதுசம்பந்தமாக இருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதுசம்பந்தமாக பாஸ்கர் கடந்த சில நாட்களுக்கு முன் ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

இதுதொடர்பாக ராணிப்பேட்டை நீதிமன்றத்தை நாடும்படி போலீசார் அறிவுறுத்தி அனுப்பினர். நேற்று முன்தினம் இந்த வழி சம்பந்தமாக திரும்பவும் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை தனபாக்கியமும், அவரது மகன் பார்த்திபனும் (25) வீட்டில் தங்கள் மீது மண்எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டனர்.

மேலும் இருதரப்பினரையும் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, இருசப்பன் மற்றும் போலீசார் நேரில் சென்று சமாதானம் செய்து தகராறில் ஈடுபடக்கூடாது. இதுகுறித்து சட்டப்படி நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணுங்கள் என சமரசம் செய்தனர்.

தாயும், மகனும் தீக்குளிக்க முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்