வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை - கலெக்டர் தொடங்கி வைத்தார்
அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.;
சிப்காட்( ராணிப்பேட்டை),
திருவலம் அருகே அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை தொடங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. ஆலையின் தலைவர் குப்பத்தாமோட்டூர் ஆனந்தன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அப்துல்லா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில இணை செயலாளர் முகம்மதுஜான்எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு கரும்பு அரவையை தொடங்கி வைத்தனர். முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் ஆலையின் தலைவர் குப்பத்தாமோட்டூர் ஆனந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆண்டு ஆம்பூர் மற்றும் திருப்பத்தூர் ஆலைகள் இயங்காததால் அங்குள்ள விவசாயிகளின் கரும்புகளும் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையிலேயே அரவை செய்யப்படுகிறது. சுமார் 2 மாதங்கள் இங்கு கரும்பு அரவை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1 லட்சத்து 5ஆயிரத்து 315 டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 89 ஆயிரத்து 528 குவிண்டால் சர்க்கரை கிடைக்கும்.
இந்த ஆண்டு வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள இணை மின் உற்பத்தி திட்டம் மூலம் 12.5 முதல் 15 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கும். இதில் அரசுக்கு 10 மெகாவாட் கொடுக்கப்படும். மீதமுள்ள மின்சாரம் ஆலை உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும். இதன் மூலம் ரூ.6 கோடி வருவாய் ஆலைக்கு கிடைக்கும்.
ஆலையில் கரும்பு கசண்டு பாவு (மொலாசஸ்) தற்போது 1,200 டன் ஆகும். அரவையின் மூலமாக 4,800 டன் கசண்டு பாவு கிடைக்கும். இதன் விலை டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்து 800 ஆகும். இந்த கசண்டு பாவு விற்பனை மூலம் ஆலைக்கு ரூ.7 கோடியே 68 லட்சம் வருவாய் கிடைக்கும். ஆலையில் கரும்பு பதிவு செய்யாத விவசாயிகளிடமிருந்தும் கரும்புகளை பெற்று அரவை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் முன்னாள் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ், ராணிப்பேட்டை நகர செயலாளர் என்.கே.மணி, மேல்விஷாரம் நகர செயலாளர் இப்ராகிம் கலிலுல்லா, சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரை, ஆலை கொள்முதல் உறுப்பினர் பாகவெளி மூர்த்தி, வேலூர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.சி.பூங்காவனம், திருவலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பிரவீணா, தொழிற்சங்க தலைவர் முனிசாமி உள்பட ஆலையின் அதிகாரிகளும், அலுவலர்கள், ஊழியர்கள், கரும்பு விவசாய சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.