விபத்தில் பலியான சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு, தனியார் கல்லூரி பஸ்சை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம்
விபத்தில் பலியான சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு தனியார் கல்லூரி பஸ்சை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). கடந்த 10-ந் தேதி அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்ததால் தனது மனைவி வசந்தி மற்றும் மகன் தேவா (10), மகள் சுகந்தி (4) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் குளத்தில் குளிப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே செல்லும் போது, புதுக்கோட்டை வெங்கடேஷ்வரா பாலிடெக்னிக் கல்லூரி பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் சிறுமி சுகந்தி பலியானார். மாணவன் தேவா கால் துண்டான நிலையில் பேராவூரணி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பஸ்சை ஓட்டி விபத்து ஏற்படுத்திய புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த டிரைவர் ஆறுமுகத்தை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல கூட கல்லூரி நிர்வாகத்தினர் வரவில்லை என்று கூறி விபத்து ஏற்படுத்திய கல்லூரி பஸ்சை, பலியான சிறுமியின் உறவினர்கள் அறிவொளி நகர் பகுதியில் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் சிறுவன் தேவாவின் கால் துண்டான நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக இதுவரை ரூ.1 லட்சம் வரை செலவாகி உள்ளது. ஆனால் விபத்து ஏற்படுத்தி குழந்தை பலியான நிலையிலும், கல்லூரி நிர்வாகம் வரவில்லை. முதலில் வருவதாக சொன்னவர்கள் கடந்த சில நாட்களாக போன் செய்தாலும் எடுப்பதில்லை.
இதனால் தான் குறிப்பிட்ட கல்லூரி வாகனத்தை மட்டும் சிறைபிடித்திருக்கிறோம். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். கல்லூரி பஸ் சிறைபிடிக்கப்பட்ட தகவல் அறிந்த பிறகு, கல்லூரி நிர்வாகத்தினர் பலியான சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வருவதாக கூறியுள்ளனர்.