குடும்பத்தகராறில், மாமியார் தலையில் கடித்த மருமகள் கைது - பொள்ளாச்சியில் பரபரப்பு

பொள்ளாச்சியில் குடும்பத் தகராறில் மாமியார் தலையில் கடித்த மருமகளை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-12-16 22:30 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சியை அடுத்த சின்னாம்பாளையம் மின்நகர் பகுதியை சேர்ந்தவர் போஜராஜன். இவரது மனைவி நாகேஸ்வரி (வயது 62). இவர் பத்திர எழுத்தாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டதால் மின் நகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் சரவணக்குமார் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் கல்பனா (42) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சின்னாம்பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டில் சரவணக்குமார் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் குடித்து விட்டு வீட்டிற்கு சென்றதால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.இதனால் தகராறு ஏற்படும் போது சரவணக்குமார் மின் நகரில் உள்ள தாயார் நாகேஸ்வரியின் வீட்டிற்கு வந்து தங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் நாகேஸ்வரி, மருமகள் கல்பனா மீது புகார் கொடுத்துஉள்ளார். புகாரின் பேரில் போலீசார் கல்பனா மீது வழக்குப்பதிவு செய்ததாக தெரிகிறது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக சரவணக்குமார் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் மனைவி கல்பனா, தனது கணவர் சரவணக்குமாரை மாமியார் நாகேஸ்வரி மறைத்து வைத்திருப்பதாக புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாகேஸ்வரி வீட்டிற்கு முன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போதுஅங்கு வந்த கல்பனா, கணவரை வீட்டிற்கு அனுப்புமாறு கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது கல்பனா ஆத்திரத்தில் நாகேஸ்வரியின் தலையில் பயங்கரமாக கடித்ததாக தெரிகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் நாகேஸ்வரி அலறி துடித்தார். இதையடுத்து கல்பனா அங்கிருந்து சென்று விட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த நாகேஸ்வரியை, அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் 6 தலையில் போடப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுஅகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் நாகேஸ்வரி புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் மருமகள் கல்பனா மீது தகாத வார்த்தைகளால் திட்டுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான கல்பனாவை பொள்ளாச்சி ஜே.எம். 1 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.குடும்ப தகராறில் மாமியாரை மருமகள் கடித்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்