குன்னூர் அருகே, மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள் - தடுப்புச்சுவர் கட்ட குடியிருப்புவாசிகள் கோரிக்கை
குன்னூர் அருகே மண் சரிவால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அங்கு தடுப்புச்சுவர் கட்டி தர வேண்டும் என்று அந்த வீடுகளில் குடியிருந்த வர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தவறாமல் பெய்து விடுகிறது. தென்மேற்கு பருவமழை மிதமாக பெய்தாலும், வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டுவது வாடிக்கையாகி விட்டது. அதன்படி நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. குறிப்பாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது. அப்போது சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
குன்னூர் அருகே உள்ள அன்னை வேளாங்கண்ணி நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த மாதம் 16-ந் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது அங்குள்ள கிருஷ்ணாபுரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 19 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் அன்னை வேளாங்கண்ணி நகரில் மண் சரிவு ஏற்பட்டு 6 வீடுகள் அந்தரத்தில் தொங்கின.
இதைத்தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் அந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் அங்கு மீண்டும் மண் சரிவு ஏற்படாத வகையில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. ஆனால் அடுத்த சில நாட்களில் பெய்த மழையில், பாதி மணல் மூட்டைகள் சரிந்து விழுந்து விட்டன. இதனால் அந்தரத்தில் தொங்கும் 6 வீடுகளும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. எனவே அங்கு உடனடியாக தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து அந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள் கூறியதாவது:-
ஆண்டுதோறும் பருவமழையின்போது நீலகிரியில் பல்வேறு இயற்கை பேரிடர்கள் நிகழ்கிறது. சமீபத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தபோது, அன்னை வேளாங்கண்ணி நகரில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. அதில் 6 வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அதில் வசித்து வந்த நாங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டோம். ஆனால் இதுவரை எங்களால் வீடுகளுக்கு திரும்ப முடியவில்லை. இதற்கு காரணம், வீடுகள் எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சம் தான்.
அங்கு மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு, வீடுகள் இடிந்து விழுவதை தடுக்க தடுப்புச்சுவர் கட்டுவதே தீர்வு ஆகும். இது தொடர்பாக அதிகாரிகளை பலமுறை வலியுறுத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து நிவாரண முகாம்களிலேயே முடங்கி கிடக்கிறோம். மேலும் அன்றாட வேலைகளையும் சரிவர மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களது நிலையை கருத்தில் கொண்டு, நாங்கள் பாதுகாப்பாக வீடுகளில் தங்க வசதியாக தடுப்புச்சுவர் கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.