கூடலூர் அருகே, மாயார் ஆற்றில் முதலைகள் நடமாட்டம் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

கூடலூர் அருகே மாயார் ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

Update: 2019-12-16 22:30 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பருவமழை பெய்து வந்தது. இதனால் கோடை காலத்தில் வறட்சியின் பிடியில் இருந்த வனம், தற்போது பசுமையாக மாறி உள்ளது. இதைத்தொடர்ந்து காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் கூடலூர், முதுமலை வனத்தில் அதிகளவு காணப்படுகிறது. கூடலூர் வனத்துக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறை வாகனங்களில் வனவிலங்குகளை காண அனுமதிக்கப்படுகிறது.

கூடலூர் பகுதியில் உற்பத்தியாகி முதுமலையில் உள்ள மாயார் ஆறு வழியாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஆற்று நீர் வனவிலங்குகளின் தாகத்தை தணித்து வருகிறது. இதனால் கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் ஏராளமான காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க செல்வது வழக்கம். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்கின்றனர். சில சமயங்களில் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அடையாளம் கண்டு அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலையோரம் மாயார் ஓடுவதால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கும் செயல்களும் அடிக்கடி நடைபெறுவது உண்டு.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கூடலூர் பகுதியில் கனமழை பெய்து வந்ததால், மாயார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தற்போது மழைக்காலம் நிறைவு அடைந்து பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதனால் ஆற்றில் நீர் வரத்து குறைந்து விட்டது. இதற்கிடையில் மாயார் ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. காலை நேரத்தில் ஆற்றில் உள்ள பாறைகளில் முதலைகள் படுத்து கிடக்கின்றன.

நேற்று முன்தினம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதியை சேர்ந்த சில குடும்பத்தினர் முதுமலைக்கு சுற்றுலா சென்றனர். அப்போது முதுமலை வனத்தை சுற்றி பார்த்து விட்டு கூடலூர் திரும்பி கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் கார்குடி அருகே சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு மாயார் ஆற்றின் அழகை கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் நடுவில் பாறையில் முதலை ஒன்று படுத்து ஓய்வெடுத்து கொண்டிருந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் தங்களது செல்போனில் புகைப்படங்கள் எடுத்தனர். வெகுநேரம் பாறையில் படுத்து இருந்த முதலை, சுற்றுலா பயணிகள் கூட்டமாக பார்ப்பதை கண்டு தண்ணீருக்குள் சென்று பதுங்கி கொண்டது.

இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளும் கூடலூருக்கு புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. வாகனத்தில் செல்பவர்கள் புலிகள் காப்பக வனத்துக்குள் அத்துமீறக்கூடாது. மேலும் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. ஆர்வ மிகுதியால் மாயார் ஆற்றுக்குள் இறங்கக்கூடாது. காட்டுயானைகள் மட்டுமின்றி முதலைகள் நடமாட்டமும் அதிகளவு தென்படுகிறது. இதனால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வனத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்