‘பாஸ்டேக் ஸ்கேனர்’ இயங்காததால் கப்பலூர்சுங்கச்சாவடியில் நெரிசல் - ஆம்னி பஸ் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
பாஸ்டேக் ஸ்கேனர் இயங்காததால் கப்பலூர் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை கண்டித்து ஆம்னி பஸ் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது.
திருமங்கலம்,
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை நேற்று முதல் அமல் படுத்தப்படுவதாக இருந்தது.
இதனால் மதுரை கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடியில் பாஸ்டேக் டோக்கன் எடுத்த வாகனங்கள் 2 முதல் 9 கவுண்டர்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. 1 மற்றும் 10-வது கவுண்டர்கள் பணம் கட்டி செல்லும் வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டன.
நேற்று காலையில் பாஸ்டேக் எடுத்த ஆம்னி பஸ்கள் அங்கு வந்தபோது பாஸ்டேக் ஸ்கேனர் வேலை செய்யவில்லை. இதனால் அங்கிருந்த பணியாளர்கள் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
ஆம்னி பஸ் டிரைவர்கள் இதனை கண்டித்து சுங்கச்சாவடி முன்பு ஆர்ப்்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பரபரப்பும் உருவானது.
போலீசார் அங்கு வந்து சமாதானம் செய்தனர். 1 மணி நேரம் கடும் நெரிசல் ஏற்பட்ட நிலையில் கூட்ட நெரிசலை சரிசெய்ய சிறிது நேரத்திற்கு எந்த வாகனத்தினரிடமும் கட்டணம் வசூலிக்கவில்லை. இந்த நிலையில் பாஸ்டேக் முறையை அமல் படுத்த மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.