அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - கலெக்டர் உத்தரவு
விருதுநகரில் கடந்த மாதம் நடந்த அ.தி.மு.க. பிரமுகர் கொலை தொடர்பான வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
விருதுநகர்,
விருதுநகரில் கடந்த மாதம் 12-ந்தேதி அல்லம்பட்டி பகுதியில் சண்முகம் என்ற சண்முகராஜ் (வயது42) என்ற அ.தி.மு.க. பிரமுகர் அவருடைய வீட்டின் முன்பு முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரணை செய்து அல்லம்பட்டியை சேர்ந்த சேர்மராஜ் (34), எம்.சதீஷ்குமார் (24), விக்கி என்ற விக்னேஷ், கீர்த்தீஸ்வரன், கிரி, பாலமுருகன், சதீஷ்குமார், பி.சதீஷ்குமார் ஆகிய 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சேர்மராஜ், எம்.சதீஷ்குமார் ஆகிய 2 ேபரையும் கைது செய்தனர். மற்ற 6 பேரும் திருப்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்நிலையில் சேர்மராஜ் மற்றும் எம்.சதீஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடக்கோரி போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் கலெக்டர் கண்ணனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து சேர்மராஜ், எம்.சதீஷ்குமார் ஆகிய 2 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.