பழுதடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

கோவை சிங்காநல்லூர் பழுதடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

Update: 2019-12-15 22:45 GMT
கோவை,

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே வீட்டுவசதி வாரியம் சார்பில் 35 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு விற்கப்பட்டன. தற்போது அவற்றில் பெரும்பாலான வீடுகள் பழுதடைந்துள்ளன. அந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டித் தர வேண்டும் என்று வீடுகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. போராட்டங்களை நடத்தியது.

இந்த நிலையில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்றுக்காலை கோவை வந்தார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் திடீரென்று சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு சென்றார். அங்கு பழுதடைந்த வீடுகளை அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

1984-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 960 வீடுகள் கட்டப்பட்டு மக்களுடைய பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டிடங்கள் இப்போது சிதிலமடைந்து இருப்பதால் அவற்றை இடித்துவிட்டு இங்கே குடியிருப்பவர்களுக்கு புதிய வீடுகளை கட்டி தருகிற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் நான் இங்கே வந்து ஆய்வு செய்தேன். இங்கே குடியிருப்பவர்கள் பத்து பதினைந்து நாட்களுக்குள் காலி செய்துவிட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்திற்குள் இங்குள்ள வீடுகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் உரியவர்களுக்கு கட்டித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் காரணங்களுக்காக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் இந்த பிரச்சினையில் நாடகம் நடத்துகிறார்.

அதில் எந்தவிதமான உண்மைத்தன்மையும் இல்லை. 960 வீடுகளில் கிட்டத்தட்ட 600 அல்லது 700 பேர் ஒப்புதல் கடிதம் கொடுத்து விட்டனர். இன்னும் 200 பேர் கொடுக்காமல் இருக்கின்றனர். அனைவரிடமும் ஒப்புதல் கடிதம் வாங்கிய பின் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒப்புதல் கடிதம் கொடுக்காதவர்கள் ஒப்புதல் கடிதத்தை தரவேண்டும். அவர்கள் தராத நிலையில் அவர்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதை இங்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர் புரிந்து கொண்டு இங்கே மிகவும் சிதிலம் அடைந்துள்ள வீடுகளை காலி செய்து அனைத்து மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மிகவும் பழுதடைந்துள்ள வீடுகளில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களுக்கு மிக சிரமமாக இருக்கும் என்பதை தெரிவித்து குடியிருப்பவர்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும். மேலும் தமிழக அரசு வீடுகளை கட்டித் தர துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.சி. ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், மற்றும் பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்