சேலத்தில், நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை: செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை

சேலத்தில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது தொடர்பாக செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2019-12-15 22:15 GMT
சேலம்,

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே சுவர்ணபுரியில் ஏ.என்.எஸ். ஜூவல்லரி நகைக் கடை உள்ளது. இதன் உரிமையாளர் ஸ்ரீபா‌ஷியம் (வயது 37). குரங்குச்சாவடியில் இவருடைய வீட்டிற்குள் புகுந்த 2 முகமூடி கொள்ளையர்கள் 2.2 கிலோ எடை கொண்ட தங்கம், வைர நகைகள் மற்றும் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீபா‌ஷியம் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் இருந்து கொள்ளையர்கள் படங்கள் எடுக்கப்பட்டு பழைய குற்றவாளிகளின் படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. கைரேகைகள், நகைக்கடை உரிமையாளர் வீட்டில் வேலை பார்த்த தொழிலாளர்கள் மற்றும் பழைய குற்றவாளிகள் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். இதில் தொடர்புடைய கொள்ளையர்களை உதவி போலீஸ் கமி‌‌ஷனர் பூபதிராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை கொள்ளை

இதுகுறித்து போலீஸ் உயர்அதிகாரிகள் கூறியதாவது:- நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நடந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் கோவையில் சமீபத்தில் இதேபோன்று ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளின் புகைப்படம் கண்காணிப்பு கேமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளது. அதில் பதிவாகி இருந்த உருவப்படமும், நகைக்கடை அதிபர் வீட்டில் எடுக்கப்பட்ட கொள்ளையர்களின் உருவப்படமும் ஒன்றாக இருப்பது போல் உள்ளது.

இதனால் இரண்டு இடங்களிலும் அவர்களே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்க வாய்ப்பு இருக்கிறது. இருந்தபோதிலும் எந்த மாவட்டங்களில் எல்லாம் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது என கேட்டறியப்பட்டது. பின்னர் கோவை, திருச்சி, மதுரை, கிரு‌‌ஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பழைய குற்றவாளிகள் படங்கள், கைரேகை குறித்த விவரம் கேட்கப்பட்டு ஒப்பீடு செய்யப்படுகிறது.

செல்போன் எண்

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 30-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் யார் எல்லாம் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தவர்கள் என்ற விவரத்தின் அடிப்படையிலும் விசாரிக்கப்படுகிறது. மேலும் சந்தேகம்படும்படியான நபர்களின் செல்போன் எண் எடுக்கப்பட்டு உள்ளது. இதை வைத்து அவர்கள் யாரிடம் எல்லாம் பேசியுள்ளனர் என்பது குறித்தும், கொள்ளையர்களுக்கு ஏதேனும் தகவல் தெரிவித்தார்களா? எனவும் பார்க்கப்படுகிறது. இதனிடையே கொள்ளையர்கள் நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டின் சுவரின் ஏறி குதிப்பதற்காக வந்தபோது, அங்கு பூப்பறித்து கொண்டு இருந்த காவலாளி ஒருவர் பார்த்தார்.

அவர் கொள்ளையர்களை மற்றொரு காவலாளி என நினைத்து நீ வேறு பக்கமாக வேலையை பாரு எனக்கூறியுள்ளார். அவர் சுதாரித்து கொண்டு சுவர் ஏறி குதித்து தப்பியுள்ளார். இதேபோல் அங்கிருந்த சுவரில் பேனர் கட்டுவதற்கான இரும்பு கம்பி சாத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடமாக பார்த்து அவர்கள் இறங்கியுள்ளார். இதை எவ்வாறு அவர்கள் கண்டு பிடித்தனர் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு 25 வயது முதல் 30 வயது வரை இருக்கலாம் என கருதுகிறோம். அவர்கள் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்