உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி, 10 ஊராட்சி ஒன்றியங்கள், 251 கிராம ஊராட்சிகளில் உள்ள 2,343 வார்டு பதவி இடங்களுக்கு தேர்தல் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி முதல்கட்டமாக தர்மபுரி, அரூர், கடத்தூர், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 27–ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2–ம் கட்டமாக ஏரியூர், காரிமங்கலம், மொரப்பூர், பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய ஒன்றியங்களுக்கு வருகிற 30–ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணும் மையங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை)யுடன் முடிவடைகிறது. இதனால் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதனிடையே வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
அலுவலர்களுக்கு பயிற்சிபாலக்கோடு ஒன்றியத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சியை கலெக்டர் மலர்விழி நேரில் பார்வையிட்டார். இதில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கோவிந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், கவுரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பென்னாகரம், ஏரியூர் ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி பென்னாகரத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், மண்டல மேலாளர் ஜெயக்குமார், தாசில்தார் சரவணன் ஆகியோர் கண்டுகொண்டு தேர்தல் நடத்தும் முறைகள், வாக்குப்பெட்டிகளை பயன்படுத்தும் முறைகள், ஒப்புகை சீட்டு வழங்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, கிருஷ்ணன் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.