திண்டுக்கல் மாவட்டத்தில், தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்,
உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. அதையொட்டி தேர்தல் மையங்களுக்கான வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில், தேர்தல் அலுவலர்களுக்கு நேற்று முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கலைக்கல்லூரியில் நடந்தது. திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன், ஆர்.டி.ஓ. உஷா ஆகியோர், வாக்குப்பெட்டியை கையாளும் விதம் குறித்தும், வாக்குப்பதிவை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் அலுவலர்களுக்கு வீடியோ காட்சிகள் மூலமும், வாக்குப்பெட்டி மாதிரிகள் மூலமும் செயல் முறை விளக்கம் அளித்தனர்.
அதே போல் பழனியில் உள்ள தனியார் பள்ளியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சப்-கலெக்டர் உமா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏழுமலையான், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேடசந்தூர், நத்தம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
பயிற்சியின் போது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதிகளை கண்டறிதல், வேட்புமனு பரிசீலனை, சின்னங்களை ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்று செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதுதவிர திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியிலும் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் அலுவலர் அன்புமணி, ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். தேர்தல் அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வருகிற 22-ந்தேதியும், 3-ம் கட்ட பயிற்சி 29-ந்தேதியும் நடக்கிறது.