புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
புதுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சமுதாய சுகாதார நிலைய மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த புதுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சமுதாய சுகாதார நிலைய மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புறநோயாளிகள் பிரிவு மற்றும் பிரசவ வார்டுகளையும் பார்வையிட்டு, நோயாளிகளிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். மேலும் தினமும் புற நோயாளிகள் வருகை குறித்து ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பி.சுமதியிடம் விசாரித்தார்.
அப்போது மருத்துவ அலுவலர் பி.சுமதி, பழுதடைந்துள்ள சுற்றுச்சுவரை அகற்றி, புதிய சுற்றுச்சுவர் கட்டவும், கர்ப்பிணி பெண்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு தடுப்பூசி போட புதிய கட்டிடம் கட்டித்தரவும் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாகவும், மருத்துவமனை தூய்மையாக சுகாதாரமான முறையில் உள்ளதாகவும் கலெக்டர் பாராட்டினார்.
ஆய்வின்போது, நாட்டறம்பள்ளி வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.திலீபன், நாட்டறம்பள்ளி தாசில்தார் உமாரம்யா, திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை பணிகள் துணை இயக்குனர் சுரேஷ், டாக்டர்கள் சுமன், மனோன்மணி, மீனாட்சி, இந்திரா உள்பட டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.